போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Monday, November 17, 2014

கடல் தாண்டி கோயில் கட்டிய தமிழர்!

மெரிக்காவின் நியூயார்க் நகரம்.. மேற்கத்திய கலாசாரம், மாடர்ன் தொழில் நுட்பத்தில் பரபரவென  இயங்கும் மக்கள். -இப்படிப்பட்ட  சூழலுக்கு நடுவில் ஆன்மீக அமைதி தரும் வகையில் ஒரு தேரோட்டம் நடந்தால் எப்படி இருக்கும் அந்த காட்சி?

என்ன கற்பனை செய்யத் தொடங்கிவிட்டீர்களா...இது கற்பனையில் புனையப்பட்டது அல்ல, இன்றும் நியூயார்க்  நகரின் குயின்ஸ் என்ற ஊரில் ஃப்ளஷிங் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ மஹா வல்லப கணபதி கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சி இது.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பலர், வார இறுதியில் தங்கள் குடும்பம் சகிதம் ஒன்றுகூடி பேசி சிரித்து மகிழ்ந்து, இறையருள் பெற்று இந்தியர்கள் என்ற உணர்வையும், நட்பையும் வளர்க்க  உதவுகிறது அங்குள்ள ஸ்ரீ மஹா வல்லப கணபதி ஆலயம். அமெரிக்காவில்  கட்டப்பட்ட முதல்  ஹிந்து கோயில் இதுதான் என்பது ஆச்சர்யமான தகவல்.

காரைக்குடி  மாவட்டம் கானாடுகாத்தானைச் சேர்ந்த ஒரு தமிழரின் முயற்சியால் உருவானது இக்கோயில். ஆலயத்தை கட்ட முதல் விதையை விதைத்தவர் டாக்டர் அழகப்பன். இதன்பின் அமெரிக்காவில் மொத்தம் 700 இந்துக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பத்திரிகையாளராகவும், ஐநா சபையின் நீர்வள மேம்பாட்டு நிதியத்தின் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த அக்டோபர்  24 -ஆம்தேதி நியூயார்க்கில் உயிரிழந்தார்.

மனைவி விசாலாட்சி மூன்று மகன்கள் மற்றும் மகளுடன் குயின்ஸில் வாழ்ந்து வந்த அழகப்பனுக்கு, அந்நிய சூழலில் வாழும் தங்கள் குழந்தைகள் ஆன்மிகப் பற்றும் , நமது இந்திய கலாசாரத்தின் அருமையும் தெரியாமல் வளர்வது மிகவும் வருத்தமளித்திருக்கிறது. இவர்களுக்கு நம் மண்ணின் மாண்பையும் ஆன்மிகத்தின் உட்பொருளையும் தெரியபடுத்த வேண்டும் என்பதை தன் நீண்ட நாள் ஆசையாகவே  கொண்டிருந்தாராம்.
சுவாமிமலை முருகன் கோயிலை கட்டி தன் முப்பாட்டனார் அருணாசலம் செய்த சேவையை தானும் தொடரவேண்டும் என்று திடகாத்திரமான முடிவில் இருந்தார். அவரது எண்ணத்தின் பயனாய் 1968 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் கோயில் நிர்மாண முயற்சிகளைத் தொடங்கினார். வட அமெரிக்க இந்து கோயில்கள் சங்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் கோயில் கட்டும் பணிகள் தொடங்கினார்.

சரித்திரத்தில் இடம்பிடித்த பலர் தங்கள் வாழ்வில் பல இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பர். அவர்கள் வாழ்வில் சோர்வடையும் போது ஏதேனும் ஒர் ஒளி அவர்களுக்கு நம்பிக்கையும் தெம்பும் கொடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி அழகப்பனுக்கு கிடைத்த ஒளி எது தெரியுமா?
அதைப் பற்றி அவரது உறவினர் அலமேலு ஆச்சி என்பவர் பிரமிப்புடன் கூறியதாவது: " கோயில் பணியை துவங்குவதற்கு முன் காஞ்சி மகாபெரியவரிடம் அருள் பெறச் சென்றார். ' நீ கோயில் கட்டுவாய் ' என்று ஆசி  வழங்கி ஒரு ருத்ராட்சத்தை வழங்கினார் பெரியவர் . அதுவே அவருக்கான இந்த பயணத்தில் நம்பிக்கையாக இருந்தது. 'பெரியவர் சொல்லிவிட்டார், இனி என்ன தடங்கல் வந்தாலும் கோயில் கட்டியே தீருவேன்' என்று அயராது உழைத்து மகாவல்லப கோயிலை கட்டினார். விக்கிரகங்கள், சிலைகள் அனைத்தும் கிரானைட் கற்களால் இங்கு செய்து அமெரிக்காவுக்கு அனுப்பபட்டது. 1977- ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய விநாயகர் பீடத்தில் வைக்க வேண்டிய யந்திரத்தை செய்து ஒரு பெட்டியில் வைத்து தந்தார் காஞ்சி பெரியவர். பிரதிஷ்டையின் போது அந்த பெட்டியை திறந்து பார்த்தால் இரண்டு யந்திரங்கள் இருந்தன. ஒன்றை வைத்து பிரதிஷ்டை செய்து, மற்றொன்றை திருப்பிக் கொடுக்கும் போது" நீயே வச்சிக்கோ" என்று மட்டும் சொன்னார். அப்போது எதுவும் புரியவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு அறுபடை வீடு கோயிலை கட்ட முடிவு செய்தபோது, நம்மிடம் தான் ஒரு யந்திரம் இருக்கிறதே, அமெரிக்காவிலிருக்கும் அதே மகா வல்லப கணபதியை இங்கும் கட்டலாமே என்று சொன்னார் அழகப்பன்.

அவ்வாறே  அறுபடை வீடு கோயிலில் இப்போது மஹா வல்லப கணபதி உள்ளார். ஒன்றோடு நின்று விடாமல், பல இடங்களில் கோயில் கட்டி இறைபணி செய்ய வேண்டும் என்று எண்ணினார் காஞ்சி பெரியவர், அவ்வாறே நடந்தது ." என்கிறார் வியப்பிலிருந்து மீளாமல்.
"நான் ஐநா சபையில் தொழில் வளர்ச்சி துறையில் பணிபுரிந்தபோது எங்கள் நட்பு உண்டானது. அவரது இறை சேவையானது அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது . அன்பு, கருணை, கல்வி, நேர்மை, ஆன்மிகத் தேடல், உதவும் குணம்  இவையெல்லாம் அவரிடமிருந்து கற்க வேண்டிய குணங்கள். நான் வேதங்கள் கற்றுதேர்ந்தவன் என்பதால் ஆன்மிகம் சம்பந்தமான பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார். அவருக்கு சந்தேகம் எழும் விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். அதை  ஆராய்ந்து பல விஷயங்களை சேகரித்து அதற்கான கோப்புகளை வைத்துள்ளேன்.
பிறப்பு முதல் இறப்பு வரை நாம் பலருடைய உதவியை நாடுகிறோம். இந்த உதவிக்கு கைமாறாக சமுதாயத்துக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதே அவரின் வாழ் நாள் லட்சியமாக இருந்தது. அதை ஆன்மிகத்தின் வாயிலாக நிறைவேற்றிவிட்டு ஆத்ம சாந்தி அடைந்தார் "என்றார் அழகப்பனின் நண்பரும், அறுபடைவீடு முருகன் கோயிலின் டிரஸ்டியுமான சுந்திரம்.
மஹா வல்லப விநாயகர் கோயில் இருக்கும் தெருவில் கோயில் பணியாளர்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. .விழாக்காலங்களில் , சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டமும் நடைபெறும். அவ்வாறு ஒரு முறை தேரோட்டம் நடைபெறும்போது, இதை விரும்பாத அப்பகுதி  அமெரிக்கர்கள் தேரை தீயிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். பதிலுக்கு கோயில் தரப்பினர் வன்முறையில்  ஈடுபட அனுமதிக்கவில்லை  அழகப்பன். மாறாக, அனைவரும் சமம் என்பதை எடுத்துகாட்டும் வகையில் மகா வல்லப கணபதி கோயிலுக்கு ஒரு விசேஷ லோகோவை  வடிவமைத்தார். ஒரு வட்டத்தில் கிறிஸ்துவர்களின்  சிலுவைக் குறியும், இஸ்லாமியர்களின்  பிறையும், அதற்கு மேல் ஓம் என்ற எழுத்தும் கொண்டது அந்த லோகோ. இதன் மூலம் அவர் சொல்ல நினைப்பது யாதெனில் 'மதங்கள் பலவாயினும் பரம்பொருள் ஒருவனே '.

ஆன்மிகத்துக்காக  அர்ப்பணித்து  வாழ்ந்த இவர் போன்றவர்களின் சேவைகள்  என்றும் அழியாத கல்வெட்டுக்களாக  வரலாற்றில்  நீடித்து நிலைக்கும் என்பது உறுதி.


- ரெ.சு.வெங்கடேஷ்
படங்கள் : தி.ஹரிஹரன்

No comments:

Post a Comment