போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Tuesday, November 4, 2014

அகவை 40...அவசியம் தேவை பரிசோதனை!

பெண்களின் வயது 40  என்றாலே, பல நோய்களுக்கு எளிய இலக்காகி விடுகிறது அவர்களின் உடல். இயல்பில் ஆண்களை விட, பெண்களுக்கான பிரத்யேக நோய்கள் அதிகம். எனவே, மெனோபாஸ் நெருங்கும் நேரத்தில், பெண்கள் மேற்கொள்ளவேண்டியதென மருத்துவ உலகம் பரிந்துரைக்கும் டாப் 5 மருத்துவப் பரிசோதனைகளை அறிவதும், அவற்றை செய்துகொள்வதும் அவசியம்! 

அவை என்னன்ன......

* மார்பகப் புற்றுநோய் பரிசோதனை 

40 வயதிற்குப் பின், ஒன்று முதல் இரண்டு வருட 
இடைவெளியில் ‘மேமோகிராம் (Mammogram) பரிசோதனை செய்துகொள்வது, மார்பகப்புற்றை அறிய உதவும். தவிர, மருத்துவர்களிடம் நேரடியாக மார்பகப்புற்றுக்கான பரிசோதனையை, 30 வயதிற்கு மேல், மூன்று வருட இடைவெளியில் செய்துகொள்ளலாம். மார்பகங்களுக்கான சுயபரிசோதனையை, கல்லூரிப் பருவத்தில் இருந்தே பெண்கள் தொடங்கிவிட வேண்டியதும் அவசியம். 

* கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனை 


‘பேப் ஸ்மியர்'  (Pap smear) பரிசோதனை, கர்ப்பவாய் புற்றுநோயை அறியும் வழி. இதை 21 வயதில் இருந்து, மருத்துவ ஆலோசனைப்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பிணிகள், அலர்ஜி உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் நீங்கலாக, கர்ப்பவாய் புற்றுக்கான தடுப்பூசியை, 13 வயதில் இருந்து எந்த வயதிலும் பெண்கள் போட்டுக்கொள்ளலாம்.

* மலக்குடல் புற்றுநோய் பரிசோதனை

 கொலனோஸ்கோபி  (Colonoscopy),  ஸிக்மாய்டோஸ்கோபி பரிசோதனைகள் மலக்குடல் புற்றுநோயைக் கண்டறிவதற்கானவை. இதில் முதல் பரிசோதனையை, 50 வயதிற்குப் பின் 10 வருடங்களுக்கு ஒரு முறையும், இரண்டாவது பரிசோதனையை, 50 வயதிற்குப் பின், 5 வருடங்களுக்கு ஒரு முறையும் செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மரபு, குடலில் கட்டி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், பரிசோதனைக்கான கால இடைவெளியை மருத்துவப் பரிந்துரையின் கீழ் குறைத்துக்கொள்ளலாம். மேலும்,  Fecal Occult Blood Test (FOBT ) பரிசோதனையான ‘ஸ்டூல்’ பரிசோதனையை, வருடத்திற்கு ஒருமுறை செய்துகொள்ளலாம்.

* இதய நோய் பரிசோதனை 

மாரடைப்பிற்கான காரணிகளான இரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கண்டறியும் பரிசோதனைகளை, 40 வயதிற்கு பின் சீரான இடைவெளியில் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொள்வது, இதய நோயில் இருந்தும், அதன் விளைவுகளில் இருந்தும் காக்கும்.

* எலும்பு பரிசோதனை 

எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை  (Bone mineral density test), எலும்பின் பலத்தையும், எலும்பு நுண்துளை நோய்க்கான வாய்ப்புகளையும் அறிய உதவும். 50 வயதை நெருங்கும் தருவாயில் செய்துகொள்ள வேண்டிய இந்த பரிசோதனையை, மரபு, கால்சியக் குறைபாடு, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையோடு அதற்கு முன்னரே செய்துகொள்வது அவசியம்.

குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில் தன்னைக் கரைக்கும் பெண், தன் மீதும் அக்கறைகொள்வதற்கான வயது 40!

-ஜெ.எம். ஜனனி

No comments:

Post a Comment