போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Tuesday, November 11, 2014

விடுகதையும் அதில் விளைந்த தமிழும்....

பேஸ்புக், ட்விட்டர், இணைய வலைப்பூக்கள் என அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அத்தனை பக்கங்களையும் விரல் நுனிகளின் உதவியால் இன்றைக்கு  ரசித்துக்கொண்டிருக்கிறோம். 

தமிழ், தமிழர் தமிழ்ப்பண்பாடு என ஒரு காலத்தில் நீட்டி முழங்கிய நம் தமிழர் வாழ்வில், இன்று தமிழ் சார்ந்த அதன் பண்பாடு தொடர்பான தமிழ் சார்ந்த விஷயங்களை ரசிக்கிறார்களா?
சினிமா என்ற ஒன்றை மீறி தமிழின் மற்ற பரிமாணங்களில் அதன் வடிவங்களை
கவனிக்கிறோமா? வழக்கொழிந்துபோன அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளையாவது எடுக்கிறோமா? இப்படி எந்த கேள்விகளுக்கும் நம்மிடம் பதிலில்லை.

பழங்காலத்தில் தமிழ் என்பது மூன்று பெரும்பிரிவுகளால் வளர்ச்சி கண்டது யாவரும் அறிந்ததே.  இயல்பு  மாறாத இயற்றமிழாலும், பல்வேறு  மன ஓட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும், உத்வேகப்படுத்தும் இசைத்தமிழாலும், கேளிக்கைகளுடன் கொண்டாடப்படும் நாகரீக நாடகத்தமிழாலும் தமிழின் வளர்ச்சி பன்முனைப்புடன் பெருகியது. 

முன்னொரு காலத்தில் தமிழைச்சார்ந்த நாடகக்கலைஞர்களின் வாழ்வும், அதை நம்பி பிழைப்பை நடத்திய இசைக்கலைஞர்களின் வாழ்வும் மக்களால் ஊக்கப்படுத்தப்பட்டன. தமிழும் செழுமைபெற்றது. ஆனால் இன்று நம்மில் எத்தனை பேருக்கு தமிழும், தமிழ் சார்ந்த விசயங்களை ரசிக்கவும் பொறுமையிருக்கிறது ?.  மாறிவரும் உலகில் "பணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு மக்கள் வாழ்வின் ரசனைகளை வெகு இயல்பாக கடந்து செல்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

தமது குழந்தைப்பருவத்தில் கோவில் திருவிழாவின்போது போடப்படும் நாடகங்களில் கட்டியங்காரனையும் ,கோமாளியின் அங்க சேஷ்டைகளையும் களிக்காமல் வளர்ந்த யாராவது இருக்கிறார்களா...."கதைக்குக்காரணம் என்னவோ என கட்டியங்காரன் விவரிக்கும்போது, அதன்பால் ஈர்க்கப்படாத இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் இல்லை என்றே கூறலாம்.  அந்தளவுக்கு தமிழும் நாடகமும் ஒரு சேர மக்களை ஈர்த்தது.

மொழியின் மாற்று வடிவங்கள் மொழியின் மீது தணியாத ஆர்வத்தை ஏற்படுத்த காரணமாகின. மொழியின் இந்த வடிவங்கள்தான் எதிர்காலத்தில் குழந்தைகள் அதை தேடிப்படிக்க ரசிக்க ஆணிவேராக இருந்தது. ஆனால் இன்று ஒரு தமிழ் ஆசிரியர் தன் மகனை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கும் அளவுக்கு தமிழின்மீதான ஈர்ப்பு வற்றிவிட்டது. 

தமிழின் சுவராஸ்யமான மாற்று வடிவங்களில் முக்கியமானது விடுகதை. சின்னஞ்சிறு வயதில் கேட்ட விடுகதையில் தமிழின் சுவராஸ்யம் பொங்கி வழிந்தது.  இன்று விடுகதையும் இல்லை, மொழியின் விளையாட்டை ரசிக்கும் குழந்தைகளும் இல்லை. நாளை இதன் நிலை இன்னும் மோசமாகலாம் என எண்ணும்போது இப்போதே இதயம் கனக்கிறது...

இங்கு "தமிழ்" என்பது வியாபாரப்பொருளானபின் அதை தங்களுக்கு முதலீடாக்கிக்கொண்டவர்கள்தான் ஆநேகம் பேர். வீழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதற்கும் மேலே. இத்தகைய சூழலில் விடுகதைக்கென வாழ்ந்த நபர்களை சந்தித்தோம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட மதுரை மாவட்டம், சூலப்புரம் என்னும் கிராமத்தில் "கதைக்குக்காரணம்" (திருவிழாக்களில் தாளம் தட்டுபவர்,திடீரென்று அதை நிறுத்திவிட்டு, விடுகதையைப் போடுவார், அதற்கான பதில்களை மக்களிடம் வினவுவார், பலதரப்பட்ட மக்களிடம் இருந்து, சுவாரஸ்யமான பதில்கள் வரும். சரியான விடை சொன்னவரைக் கௌரவப்படுத்துவார். பின் மீண்டும் நிகழ்ச்சி தாள ஓசையுடன் தொடரும்) என ஊர்த்திருவிழாக்களில் சுற்றித்திரிந்த "கொட்டுக்கார-வெள்ளையனைச்"சந்திக்க நேர்ந்தது சுவராஸ்யமானது.
வறுமைக்கு வாய்க்கப்பட்டவராய், பார்வைமங்கி, பல நாட்கள் சவரம் செய்யாத தாடியுடன், தடியுடன் முதுமையின் வாயிலில் இருந்தார்.  ஒட்டிப்பிறந்தது "புலமையும் வறுமையும்"எனும் பதம் அவரைக்கண்டதும் கண்முன் நிழலாடியது.
"இப்ப இருக்கிற இளந்தாரி (இளையவயதினர்) பயலுக யாருக்கும் ஒரு விடுகதைக்கூட காரணம் (பதில்)சொல்லத்தெரியுறதில்லை. யாரும் இதில் ஆர்வம் கிடையாது" என வேதனையை வெளிப்படுத்தினார் கொட்டுக்கார  வெள்ளையன். 

தொடர்ந்து விடுகதைகளின் வாயிலாக குழந்தைகளும் இளைஞர்களுக்கும் அக்காலத்தில் தமிழின் மீதான ஆர்வத்தை வளர்த்தெடுக்கப்பட்டதை பல்வேறு விஷயங்களைக் கூறி, இப்போதுள்ள இளைஞர்களின் வெறுமையான ரசனைகளை ஆதங்கத்துடன் பட்டியலிட்ட  வெள்ளையன், தன் காலத்து இளைஞர்களை கட்டிப்போட்ட பல விடுகதைகளை நமக்கு சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். அவை வாசகர்களுக்காக இதோ

1)"பேயாத பெருமழை பேஞ்சாலும் ,குறுகாத குஞ்சு என்ன குஞ்சு"-
    பதில்-மீன் குஞ்சு

2)"ஒரு பாத்தியில நாலு வெள்ளாம, நாலு வெள்ளாம வெளேர்னு இருக்கும்"-அது என்ன?
   பதில்--பால்,மோர்,தயிர்,வெண்ணெய்

3) "காடெல்லாம் சுத்தி வரும் கண்டலப்பசுவே..!"
   கண்ட தண்ணிய குடிக்காத! வெங்கலப்பசுவே...!அது என்ன?
     மிதியடி(அ) செருப்பு

4) "சடுகுடு....சடுகுடுன்னு ஓடற...புறாவே..."
  "உள்ளிப்பிடிச்சா...சதையில்ல..."-அது என்ன?
     பதில் ---- தண்ணீர்

5)"ஓ...ஓ மரமே...ஒசந்தமரமே...
  ஒரு பிடி இலைக்கு கெதிகெட்டமரமே....அதுஎன்ன?
பதில்---கள்ளிமரம்

6)"கொண்டையில பூ இருக்கு, வாடை இல்ல...
  கையத்தட்டுன்னா...கை..வலிக்கல..
  கிண்டிவிட்ட வெள்ளாம வரலை- அது என்ன?

   பதில்---கொண்டை சேவல்

7)"அட்டைக்கு ஆயிரம் கண்ணு,"
   "முட்டைக்கு மூன்று கண்ணு"- அது என்ன?

பதில்-கட்டிலும் தேங்காயும்

8)  "திங்க பழம் காய்க்கும்...திங்காத காய் காய்க்கும்"- அது என்ன?

   பதில்--வேப்ப மரம்

9)"ஆகாயத்து மணி ஆட்டு...லா..லா.."
  வெட்டி  நறுக்கி...லா..லா..
  ஏப்பி...சூப்பி...லா...லா- அது என்ன?

   விடை-முருங்கைக்காய்

10)"ஒசரப்பறக்குது...மைனா..குருவி..."
   "நெஞ்சு அறுத்தா..நத்தம் (இரத்தம்) இல்ல?-அது என்ன?

   விடை:ஈசல்

11)"செவலைக்காளை..பட்ட வெளியில் தின்னுது
   பச்சைப்புல்..திங்க..மாட்டியுது- அது என்ன?

   விடை--தீ

12) கட்ட காளை...பழியா...பாயுது...ஆளா...அது என்ன?

   விடை--நெருஞ்சி முள்

13) மண்ணுக்குள்ளயிருக்கிற...மயிராண்டி....
      உரிக்க...உரிக்க தோளாண்டி- அது எனன?

    விடை---வெங்காயம்

14)"கதைகதையாக்காரணமாம்...
   காரணத்துல...ஒரு ஊரணியாம்...
   ஊரணியில....ஒரு...உழக்குத்தண்ணி...
  குடிச்சுப்பார்த்த இனிச்சுக்கிடக்கு"-அது என்ன?

  விடை---இளநீர்

தமிழால் வளர்ந்தவர்களை மட்டுமே,,,கண்ட நமக்கு....தமிழால் வீழ்ந்தவர்களையும் தெரிந்தகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வோம். இவர்களையும் இவர்களால் வளர்த்தெடுக்க்ப்பட்ட மொழியின் மற்ற கலை வடிவங்களை  மீட்டெடுக்க தமிழ்கூறும் நல்லுலகம் இனியாவது முற்படுமா...?

ம.மாரிமுத்து

No comments:

Post a Comment