போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Thursday, February 5, 2015

புலி வருது!


முன்பெல்லாம் படத்துடைய டீஸர் வந்தாதான் ஓட்டுவாங்க. ஆனா டைட்டிலுக்கே ஓட்டு மேல ஓட்டு வாங்கின படம் ‘புலி’. இந்தப் புலிக் கதை எப்பிடி இருக்கும்? பார்க்கலாம்.

கதை மன்னர் காலத்தில் ஆரம்பிக்கிறது. மக்களுக்கு ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என அறிவுரைகள் வழங்குவது, எதிரிகளிடம் ‘ஒரு வாட்டி முடிவு பண்ணா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்டா’ என சவால் விடுவது என்று மக்களுக்கு நல்ல ‘தலைவா’வாக நாட்டுக்கே நல்ல காவலனாக இருக்கிறார் மன்னர் புலிப்பாண்டி (விஜய்). இவர் பேசும் பன்ச்களால் மக்கள் இவரை பன்ச் பாண்டி என்றும் செல்லமாக அழைக்கின்றனர். இவரின் மனைவி (ஹன்சிகா) மற்றும் மகன் புலிக்குட்டியுடன் (குட்டி விஜய்) மகிழ்ச்சியாக ஆட்சி நடத்துகிறார்.
அப்போது விஜய் நாட்டின் மீது போர் தொடுத்து எதிரி நாட்டு மன்னர் சுதீப் பெரும் படையோடு வந்துகொண்டிருக்கிறார். இப்போ ஃப்ளாஷ் பேக். முந்தைய போரின் வெற்றி விழாவின்போது மன்னர் விஜய் ‘நம்மகிட்ட சாஃப்டா சண்டை போடுறவங்க கிட்ட சாஃப்டா சண்டை போடணும், வேற மாதிரி சண்டை போடறவங்ககிட்ட வேற மாதிரிதான் சண்டை போடணும்’ என்று பன்ச் பேசியதில் கடுப்பான சுதீப் படையுடன் வருகிறார். விஜய்யின் அரண்மனை முன்பு ‘வா வேற மாதிரி சண்டை போடலாம்’ என ‘கத்தி’ சண்டைக்கு அழைக்கிறார் சுதீப்.
சும்மா விடுவாரா மன்னர் விஜய்? அத்தனை பேரையும் ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறார். இவருடன் வேற மாதிரி சண்டை போட முடியாது, சாஃப்ட்டாதான் போடணும் என முடிவு செய்யும் சுதீப், விஜய் தன் மகனுடன் வேட்டைக்குச் செல்லும்போது மறைந்திருந்து தாக்குகிறார் (இதான் சாஃப்டா சண்டை போடுறது). மகன் உயிரையாவது காக்க வேண்டும் என்று தப்பி ஓடச் சொல்கிறார். மகனும் காட்டில் இடையில் வரும் கரடியை எல்லாம் ‘ஹரஹர மஹா தேவகி’ மந்திரத்தைச் சொல்லி கடந்து ஓடுகிறான். கடைசியில் ஒரு பெரிய கருந்துளைக்குள் (ப்ளாக் ஹோல்) நுழைகிறான். அங்கே நுழையும் விஜய் டைம் ட்ராவல் செய்து 2,200-வது வருடத்துக்கு வருகிறார்.
அந்தத் துளையின் முடிவு கடலில் முடிகிறது. கடலில் சிறுவனாய் விழுந்த விஜய் டால்ஃபின் டைவ் அடித்து எழும்போது இளைஞனாகியிருக்கிறார். இங்கே மக்களின் உடைகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். எப்படி திரும்பி தன் காலத்துக்குப் போவது என யோசிக்கிறார். தன் பெயர் புலி என கூறி தன் நிலையை பலரிடமும் விளக்குகிறார். ஆனால் புலி மீம்ஸ் உருவானதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
கும்பலாக விஜயைக் கலாய்த்துக்கொண்டிருக்கும்போது அவரைக் காப்பாற்றுகிறார் ஸ்ருதிஹாசன். விஜய்யின் ஃப்ளாஷ்பேக் கேட்டு கலங்கிப் போகும் ஸ்ருதி அவருக்கு உதவுகிறார். தன் ஏழாம் அறிவைப் பயன்படுத்தி விஜய்யை மீண்டும் அவர் காலத்துக்கே கொண்டு செல்ல ஆராய்ச்சிகள் செய்கிறார். ஐ.ஐ.டி காட்டுக்குள் அழைத்துச் சென்று பெரிய சுவரை எழுப்பி அதன் நடுவில் துளையை ஏற்படுத்தி ‘இது பாதி தர்மர் எழுதின குறிப்புகளை வெச்சி உருவாக்கின ப்ளாக் ஹோல். இது வழியா நீ போனா உன்னுடைய காலத்துக்குப் போயிடலாம்’ என கூறுகிறார்.
நைட் மட்டும்தான் அது வேலை செய்யும் என்பதால், இரவுக்காகக் காத்திருக்கின்றனர். இரவானதும் ஸ்ருதிக்கு நன்றி கூறிவிட்டு கருந்துளைக்குள் நுழைய ஸ்லோமோஷனில் நடக்கிறார் விஜய். தேவி ஸ்ரீபிரசாத் பேக் ரவுண்டு மியூசிக்கில் ஓவராக ரொமான்ஸ் பரவ, திரும்பி வந்து ஸ்ருதியிடம் காதலைச் சொல்கிறார். இருவரும் டூயட் பாடி முடித்ததும் அந்த ப்ளாக் ஹோல் வழியாக வில்லன் சுதீப் என்ட்ரி ஆகிறார். அதிர்ச்சியாகும் விஜய் கையில் கத்தியை எடுக்கிறார். சுதீப்போ துப்பாக்கியை எடுக்க மெர்சலானதை வெளிக்காட்டாது பட்டென சுதீப்பைப் பார்த்து ‘துப்பாக்கி எடுத்தவனுக்கு கத்தியாலதான்டா சாவு’ எனப் பன்ச் அடிக்க, காண்டான சுதீப் இந்த பன்ச்சால் காண்டாமிருகமாக வெறியாகிறார்.
கையில் வைத்திருக்கும் காயினை விஜய் சுண்டிவிட அனைத்து பெட்ரோமாக்ஸ் லைட்டும் அணைகிறது. அந்த கேப்பில் அத்தனை பேரையும் அடித்து பறக்கவிடுகிறார். எதிரிகளை அழித்துவிட்டு ப்ளாக் ஹோலுக்குள் விஜய் நுழையப் போகையில் விஜய்யின் கையை ஸ்ருதி பிடிக்கிறார். ‘இனிமே என் வாழ்க்கை உன்னோடதான், இந்த டெக்னாலஜியே இல்லாத உலகத்துல நான் வாழ ஆசைப்படுறேன்’ எனக் கூற இருவரும் நுழைகிறார்கள். ஆனால், அது அவர்களை ஃபோர்த் டைமென்ஷனில் கொண்டு விடுகிறது. அதன் பின் எப்படி விஜய்யும் ஸ்ருதியும் பழைய காலத்துக்கே திரும்பிச் செல்கின்றனர் என்பது ‘புலி-2’வில் தெரியும்!
- பா.ஜான்ஸன்

No comments:

Post a Comment