போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Sunday, November 9, 2014

பேப்பர் கப்... உஷார்!

'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப்
கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில் ஒருவித மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களில் சூடான டீ அல்லது காபி நிரப்பப்படும்போது, அந்த வெப்பம் காரணமாக, பேப்பர் கப்களில் இருக்கும் மெழுகும் கூடவே கொஞ்சம் உருகி, டீ - காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகிறது. அது நாளடைவில் வயிற்றில் பல உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. டீ, காபி அருந்துவதற்குக் கண்ணாடிக் குவளைகளே சிறந்தவை. சில்வர் டம்ளர்களையும் உபயோகிக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும். தயவுசெய்து இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!''
 - இப்படி ஒரு பதிவு சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கங்களில் வலம் வந்தது. படித்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. பிளாஸ்டிக் தட்டுகள், டப்பாக்கள், டம்ளர்கள் ஆகியவற்றின் மூலம் உணவு உட்கொள்வதால், நம் உடலில், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.
''பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்துவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுவது உண்மைதான். மரப்பிசினில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பேப்பர் கப் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை அமெரிக்காவின் 'எஃப்.டி.ஏ’ ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இன்று பெரும்பாலும் நம் நாட்டில் 'பெட்ரோ-கெமிக்கல்’ மெழுகுதான் பயன்படுத்தப்படுகிறது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
பேப்பர் கப்பால் மட்டும் அல்ல. இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்  பேப்பர் பிளேட், பாத்திரம், டம்ளர் போன்ற பொருட்களால்கூட நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. உணவு வகைகளில், காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது பிளாஸ்டிக்குடன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும். பிளாஸ்டிக் டப்பா அல்லது தட்டுகளில் வைத்து ஏதோ ஒரு நாளோ, இரண்டு நாளோ உணவு சாப்பிட நேரும்தான். ஆனால், அதுவே வழக்கமாக மாறும்போது ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரைக்கும் நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடும்!'' என்று எச்சரிக்கிறார் சித்த மருத்துவரான சிவராமன்.
''இதுபோன்ற மலிவான பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கும்போது உணவில் இருக்கும் நுண் சத்துக்கள் அதாவது மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் சிதைந்துவிடும். ஆகையால் இவை தவிர்க்கப்பட வேண்டியவை'' என்பது கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்டான சந்திரமோகனின் கருத்து.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சு இயல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் கார்த்திகேயனும் இதே கோணத்தில்தான் பேசுகிறார். ''பிளாஸ்டிக் நெகிழும் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக சில கூட்டுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கூட்டுச் சேர்க்கையை 'பிளாஸ்டிசைஸர்’ என்பார்கள். சுமார் 100 விதமான பிளாஸ்டிசைஸர்கள் இன்றைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கு என்றே 'ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்ஸ்’ (திஷீஷீபீ நிக்ஷீணீபீமீ றிறீணீstவீநீs) என்ற தனி ரகம் உள்ளது. அதிலும் 'உணவுத் தரக் கட்டுப்பாடு’ முறையின் கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பேப்பர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஹோட்டல்களில் சாம்பார், ரசம், சட்னி போன்றவற்றைக் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை. பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. அதேபோல உணவுப் பொருட்களிலும் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. பிளாஸ்டிக்கில் இருக்கிற வேதிப் பொருள் உணவில் இருக்கும் வேதிப் பொருளுடன் கலப்பதை 'மைக்ரேஷன்’ என்போம். உணவு நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவதற்கு இதுதான் காரணம்.  உணவு வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் சேமித்துவைப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது!'' என்கிறார் கார்த்திகேயன்.
''பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுமா?'' என புற்றுநோய் நிபுணர் ராஜாவிடம் கேட்டோம். நம் பதற்றத்தை உணர்ந்துகொண்ட அவர், ''பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உணவைச் சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான நேரடியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றாலும், மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்யப் பயன்படுத்தும் பெட் பாட்டில்களைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன'' என்கிறார்.
''40 மைக்ரான் அடர்த்திக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இன்னும் பல ஹோட்டல்களில் அந்தச் சட்டத்தை மதிக்காமல், சாம்பார், ரசம், சட்னி போன்ற உணவு வகைகளை மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளில்தான் கட்டித் தருகிறார்கள். இது மிகவும் தவறு. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியும்.
உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொடுப்பதைவிட, வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையான பொருட்களில் கட்டிக் கொடுக்க நுகர்வோர் கட்டாயப்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பது நுகர்வோரின் கைகளில்தான் இருக்கிறது!'' என்பது  'நுகர்வோர் ஆலோசனைக் குழு’ அமைப்பைச் சேர்ந்த சரோஜாவின் கருத்து.
நம் வசதிக்காகப் பயன்படுத்தும் பொருள்தான் பிளாஸ்டிக். ஆனால், அந்த வசதியே நம் உடல் நலத்துக்கு எதிராகத் திரும்புகிறது என்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டாமா?

மண் பானை மகத்துவம்!
குடிநீரை பிளாஸ்டிக் கேன்களில் நிரப்புவதற்குப் பதிலாக, சில்வர் ஃபில்டர்களில் நிரப்பிவைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீரைக் காய்ச்சி, ஆறவைத்து அதை மண் பானைகளில் நிரப்பிக் குடித்தால்... குளிர்ச்சிக்குக் குளிர்ச்சி, ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள அசைவ உணவுகளில் பிளாஸ்டிக் மிக வேகமாக 'மைக்ரேஷன்’ நடத்தும். அப்போது பிளாஸ்டிக்கின் வேதிப் பொருட்கள் அசைவப் பொருட்களுடன் கலந்து நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படும் உணவுப் பொருட்கள், குளிர்பானம் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். அவற்றில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், 'மைக்ரேஷன்’ மிக வேகமாக நடக்கும்.

No comments:

Post a Comment