போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Monday, November 10, 2014

மன்னாரில் அழிவடைந்து செல்லும் பிரித்தானியர் கால மாளிகை!


கி.பி.1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து இலங்கை மேலைத் தேசத்தவரின் ஆதிக்கத்திற்கு உட்படத் தொடங்கியது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோர் இலங்கையை ஆக்கிரமித்து வைத்திருந்த போதும் பிரித்தானியருக்கே வரலாற்றில் தனி இடம் உண்டு.
ஏனெனில் முழு இலங்கையையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் பிரித்தானியரே. பிரித்தானியர் ஆட்சியினால் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. அவை இன்று வரையும் தாக்கம் செலுத்துகின்றன என்பதையும் நாம் மறுக்கமுடியாது. 

அந்த வகையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் காணப்பட்ட கட்டட நிர்மாண கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு படைப்பே ஆளுநர் பிரட்டிக் நோர்த் அவர்களின் மாளிகை. கி.பி 1804 இல் கட்டப்பட்ட இந்த மாளிகை மன்னார் மாவட்டத்தின் அரிப்பு பிரதேசத்தில் உள்ளது. இலங்கையின் கரையோரத்தை நிர்வகித்த முதலாவது பிரித்தானிய ஆளுநரே பிரட்டிக் நோர்த் (கி.பி.1798- 1805). இவர் கரையோர வர்த்தகத்தை கண்காணிக்கும் முகமாகவும் தமது வாசஸ்தலமாகவும் இந்த மாளிகையை பயன்படுத்தி வந்துள்ளார். மன்னார், அரிப்பு கடலுக்கு அருகில் உள்ள ஒரு கற்பாறையின் மேல் செங்கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு மிகவும் பாதுகாப்பான முறையில் திட்டமிட்டு இது அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மாளிகையில் நான்கு சிறிய அறைகளைக் கொண்ட கீழ் மாடி காணப்படுவதுடன், வீட்டின் மத்திய பகுதியில் உள்ள படிக்கட்டு ஊடாக மேல்மாடிக்கும் செல்ல முடியும். மிகப்பெரிய சாப்பாட்டு அறையும் ஆளுநரின் உறங்கும் அறையும் இதில் அமைந்துள்ளன. இந்த மாடிக்கட்டடத்தின் அருகில் இரு கட்டடங்கள் காணப்பட்டுள்ளன. அவை தற்போது முற்றாக சிதைவடைந்து அத்திவாரம் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த மாளிகையின் வடிவமைப்பு பிரட்டிக் நோர்த் ஆளுநராலேயே மேற்கொள்ளப்பட்டதுடன் பெரிய தூண்களை (டொரிக்) கொண்டு அமைக்கப்பட்ட கிரேக்க நாட்டு வீட்டு நிர்மாணக் கலையாகும். இம் மாளிகையில் இருந்து கொண்டாச்சி குடாவின் முத்து அகழ்வு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் தொழிலாக முத்து அகழ்வு பிரித்தானிய நூல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இம் மாளிகையானது இலங்கையில் உள்ள மிகவும் அழகான வீடாகவும் வீட்டு நிர்மாண கலைக்கு அமைவாக கட்டப்பட்ட கட்டடமாகவும் உள்ளது என பிரித்தானிய எழுத்தாளரான ஜேம்ஸ் கொர்டினர் பாதிரியார் கி.பி 1807 ஆம் ஆண்டு தான் எழுதிய 'ரசித டிஸ்கிரிப்ஷன் ஒவ் சிலோன்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சிறப்பு மிக்கதாக அமைந்துள்ள வெள்ளையரின் இம் மாளிகை இலங்கையின் 1940 ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருள் சட்டத்தின் கீழ் முக்கியமான சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கடல் அலைகளின் தாக்கத்தினால் இதன் ஒரு பகுதி கடல் பகுதிக்குள் சிதைவடைந்து விழுந்துள்ளது. ஏனைய பகுதிகளும் கடல் அலையின் தாக்கத்திற்கு உட்பட்டு சிதைவடைந்து வருகின்றது. அந்த ஊர் மக்கள் இந்த மாளிகையை அல்லிராணி கோட்டை என்றே அழைக்கின்றனர். கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட இந்த அல்லிராணி கோட்டை இராவணன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும், மன்னராட்சிக் காலத்தில் அல்லி என்ற ராணி இந்த மாளிகையில் வசித்தார் என்றும், மன்னார் பிரதான போட்டையிலிருந்து இந்த மாளிகைக்கு சுரங்கவழி போக்குவரத்து இருந்தது என்றும் மற்றமொரு மரபுவழி கதை கூறுகிறது. மன்னார் செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் இந்த மாளிகையை கடல் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்பாகும்.
-கே.வாசு-

No comments:

Post a Comment