போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Monday, May 25, 2015

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!


பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குநர் ஜக்குவஸ் ஓடியேட் இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருதை வென்றுள்ளது.
பிரான்ஸில் நேற்றிரவு நடந்த கேன்ஸ் திரைப்பட விழா இறுதி நாள் நிகழ்ச்சியில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or  என்ற  கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோனிதாசன், நாயகியாக காளீஸ்வரி சீறினிவாசன், சிறுமியாக கிளாடின் விநாசித்தம்பி ஆகியோர் நடித்திருந்தனர்.
ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் மிகப்பெரிய விருதுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள்.
 
குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது.

ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்த திரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி கூறியுள்ளார்.

புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்னைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது.

கேன்ஸில் இந்த திரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment