போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Friday, May 15, 2015

#ஆடுகிறார்கள்... பாடுகிறார்கள்... மனதுக்குள் அழுகிறார்கள்... இதுதான் சியர் லீடர்கள்!

சியர் லீடர் எனப்படும் உற்சாக அழகிகளை ஐ.பி.எல். போட்டியில் அறிமுகப்படுத்தியவர் லலித் மோடி. கிரிக்கெட்டோடு கலந்து  அழகிகளின் ஆட்டத்தையும் ரசிகர்கள் கண்டு உற்சாகமடையட்டும் என்பது அவரது எண்ணம். முதலாவது ஐ.பி.எல். தொடரின்போதுதான் இந்த சியர் லீடர்கள் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகினர். இந்தியாவில் விளையாட்டு மைதானங்களில் இத்தகைய ஆட்டம் முதலில் இடம் பெற்றது கிரிக்கெட் மைதானங்களில்தான். விளையாட்டு மைதானங்களில் இது தேவையா? என்று முதலில் கேள்விகள் எழுந்தாலும் பின்னர் பழகிப் போனது. 

வெளியில் பார்த்தால் படு குதூகலமும், உற்சாகமுமாக வலம் வரும் இந்த சியர் லீடர்கள் தங்களது சோகத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தக் கூட முடியாத வாயில்லா ஜீவன்கள் என்றால் அது நிச்சயமான உண்மை. சியர் லீடர்கள் மைதானத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஒரு சியர் லீடர் வெளியிட்டுள்ள கருத்து, அவர்கள் மீது பச்சாபத்தை வரவழைக்கிறது.
பெயர் குறிப்பிடாத ஒரு சியர் லீடர், ரெட்டிட் தளத்தில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்று கூறி, கேள்விகளுக்குப் பதில் கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.
''பெண்களைத் தொட நினைப்பதும், உரச நினைப்பதும் இந்தியாவில் பல ஆண்களுக்கு வக்கிரமான பொழுதுபோக்கு. சியர் லீடர்களையும் ரசிகர்கள் தொட போட்டி போடுகிறார்கள். இதனை நான் வெறுக்கிறேன். சியர் லீடர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குப் பின்னால் உள்ள காலரியில், சியர் லீடர்களைப் பார்த்து ரசிகர்கள் அடிக்கும் கமெண்டுகளை காது கொடுத்துக் கேட்க முடியாது. ஆனாலும், சிரித்தபடி அதை சமாளிக்க வேண்டிய சூழல் எங்களுக்கு இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் பூராவும் இந்தத் தொல்லை இருக்கிறது. இந்தியர்களை ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டவில்லை. ஆனாலும், மேற்கத்திய நாடுகளை விட  இந்திய ரசிகர்கள்தான் அதிக சேஷ்டை  செய்கின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் எங்களை பார்க்கும் பார்வையே தப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், அதுபோன்ற ரசிகர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. இதனால்தான் ஆண் ரசிகர்களுடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் மட்டுமே நாங்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகிறோம்.
இந்தியப் பெண்களையும், எங்களுடன் இணைந்து செயல்பட வைத்தால் பல பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது. நாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து எங்குமே பேச முடியாது. பேசினால் ஒப்பந்தத்தை  ரத்து செய்து விடுவார்கள். அந்த இடத்தில் அடுத்த நாள் வேறு ஒரு வெள்ளைத் தோல் பெண் வந்து ஆடுவார். சியர் லீடர்களிலும் இனப் பாகுபாடு இருப்பதாக நான் உணர்கிறேன். அது ஏன் வெளிநாட்டு வெள்ளைத் தோல் பெண்கள் மட்டும்தான் கவர்ச்சிகரமாக டிரஸ் போட வேண்டுமா என்ன? இந்தியப் பெண்கள் போடக் கூடாதா?  இதுகுறித்து எனது மேனேஜர்களிடம் நான் கேட்டபோது, அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.''

இவ்வாறு அந்த சியர் லீடர் பெண் கூறியிருக்கிறார்

No comments:

Post a Comment