போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Monday, December 8, 2014

புலம் பெயர்ந்த மண்!

'என் தாய் மண்ணைப் பிரிந்திருப்பது உயிரைப் பிரிந்திருப்பது போல இருக்கிறது!’  தாய்நாட்டைப் பிரிந்து அந்நிய மண்ணில் வாழும் அனைவருமே பேசும் வார்த்தைகள்தான். இந்த ஏக்கத்தை வார்த்தை அளவிலாவது தீர்க்க முயன்றிருக்கிறார் திபெத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். 32 வயதாகும் அந்த இளம் ஓவியரின் பெயர் டென்ஸிங் ரிக்தோல். புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களின் தாய்மண்ணைத் தழுவும் கனவுக்கு டென்ஸிங் உயிர் கொடுத்திருக்கிறார். கடந்த 2008ல் இருந்து பல்வேறு மக்கள் உதவியுடன் இதுவரை 20,000 கிலோ திபெத்திய மண்ணை சேகரித்து வந்திருக்கிறார். அவற்றை இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் தரம்சாலா என்ற ஊருக்குக் கொண்டுவந்து ஒரு திடலை உருவாக்கி திபெத்தியர்களின் 'தாய்மண்’ கனவை
நிறைவேற்றி இருக்கிறார். சொந்த மண்ணை மிதிக்க வழியில்லாத மக்கள் இங்கு வந்து சென்டிமென்ட்டாக சென்டிமீட்டர் சென்ட்டிமீட்டராக மண்ணை மிதித்து தாய்மண்ணைத் தழுவிய உணர்வைப் பெற்று நெகிழ்ந்து செல்கிறார்கள். திபெத்திய மண்ணால் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில் மைக்ரோபோன் பதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் நெகிழ்ச்சியோடு புலம்பும் குரல்கள் அந்தத் திடல் முழுக்க எதிரொலித்து எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. தரம்சாலாவில் இருக்கும் அந்தத் திடலுக்கு 'லிட்டில் திபெத்’ என்று பெயர் வைத்திருக்கிறார் டென்ஸிங்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓவியம் மற்றும் சிற்பக்கலைஞராக வாழ்ந்துகொண்டிருக் கும் டென்ஸிங்குக்கு இந்தியா வந்து இத்தனை வருடங்கள் இப்படி மண்ணோடு புழங்கும் கனவு எப்படி வந்தது என்பதற்கு சென்டிமென்ட் காரணம் இருக்கிறது.
2008ல் அவரின் தந்தை நோர்பு வாங்டு அமெரிக்காவில் ஓர் அகதியாகத் தன் கடைசிக் காலத்தைக் கழித்து நோய்வாய்ப்பட்டு மறைந்தார். சாவதற்குமுன், 'ஒருமுறையாவது நான் பிறந்த மண்ணைத் தொட்டுப்பார்க்கணும் மகனே!’ என்றிருக்கிறார். அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரைத் திபெத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இருந்தபோதே இறந்துவிட்டார். அப்போதுதான் திபெத்திலிருந்து பிரிந்து தரம்சாலாவில் வாழும் திபெத்தியர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே விசிட் அடித்தார். இந்த புராஜெக்ட்டை அவருடைய நண்பர் டென்ஸின் சேடன் சோக்லே என்பவர் 'ப்ரிங்கிங் திபெத் ஹோம்’ என்ற தலைப்பில் டாக்குமென்ட்ரி படமாக இயக்கி உள்ளார். இந்த ஆண்டு உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களை தரம்சாலாவை நோக்கி இந்த ஆவணப்படம் இழுத்திருக்கிறது.
''இது என் தந்தையின் கனவு. என் நாடு, என் மண், என் மக்கள் என்ற உணர்வின் வெளிப்பாடு. உலகம் முழுவதும் விரவிக்கிடக்கும் திபெத்தியர்கள் இப்போது தங்கள் மண்ணை மிதிக்க, தொட்டுக் கும்பிட, முத்தமிட என்னால் இயன்ற சிறிய முயற்சி இது. 2011 அக்டோபரில் 'அவர் லேண்ட், அவர் பீப்பிள்’(Our Land, Our People) என்ற இணையதளத்தை ஆரம்பித்து 'தாய்மண்’ சேகரிக்கும் திட்டத்தை முதன்முதலாக அறிவித்திருந்தேன். மூன்றே நாட்களில் 50,000 பேர் அதைப் பார்த்திருந்தார்கள். மூன்று நாடுகளைக் கடந்து இப்படி மண் சேகரித்துக் கொண்டுவருவது என்பது பெரும் சவாலாக இருந்தது. சீனா இந்தத் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தது. இந்தியா ஆதரவளிக்கவும் வேறு வழியில்லாமல் சீனாவும் கண்டுகொள்ளவில்லை. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்னுடன் கைகோத்துக்கொண்டு களத்தில் இறங்கிக் கடந்த ஆண்டு வரை 20,000 கிலோ மண்ணைச் சேகரித்துக் கொடுத்தன.
அப்போது எங்கள் உணர்வை ஆவணப்படமாக எடுக்க அந்த இணையதளத்தின் வழியே மக்களிடம் பணம் கேட்டிருந்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு. தலாய்லாமா, முதல் கைப்பிடி மண்ணை ஆசீர்வதித்து பணம் கொடுத்து அதை ஊக்குவித்தார். இன்றுவரை ஒரு லட்சத்து 15,000 திபெத்தியர்கள் தரம்சாலாவுக்கு வந்து அந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றிருக்கிறார்கள். என் தந்தையின் ஆன்மா சந்தோஷத்தில் திளைத்திருக்கும் என நம்புகிறேன். நெகிழ்ச்சிப் படமாக உலகத்தின் எல்லா திரைப்பட விழாக்களிலும் இப்போது பாராட்டுகளைக் குவிப்பது இன்னும் சந்தோஷத்தை அளிக்கிறது. இது எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல. ஒட்டுமொத்த திபெத்தியர்களின் வெற்றி. ஏனென்றால் நாங்கள் சுமந்து வந்திருப்பது வெறும் மண்ணை மட்டும் அல்ல. எங்கள் கனவையும்தான்'' என்று சிலிர்க்கிறார்!
ஆர்.சரண்

No comments:

Post a Comment