போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Monday, December 15, 2014

ஒரு கைதியின் கனவு!

மாற்றம்  ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பது சொலவடை அதை உண்மையென நிரூபித்து இருக்கிறார் ஒரு கூலித்தொழிலாளி .
சந்தர்ப்ப சூழ்நிலையால் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு இன்று மனம் திருந்தி தன்னை சமூக சேவையில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள, விருதுநகர் மாவட்டம்  காரியாபட்டி தாலுகாவில் உள்ள கீழ உப்பிலிக்குண்டு  எனும் குக்கிராமத்தில் வாழும் சுமார் ஐம்பது  வயதான முருகன்,  தான் வாழும் ஊரில் எத்தனையோ  போராட்டங்களுக்குப் பிறகு மக்கள் படிப்பறிவு பெற  நூலகம்  இல்லாத குறையை  போக்க, தீவிர முயற்சி  எடுத்து ஒரு
நூலகத்தை துவக்கி தற்போது அந்த நூலகத்தை அரசாங்கத்திடம் வழங்கி உள்ளார்.
நாம் அவரை சந்தித்தபோது, தன்னுடைய கூலி வேலையில் மும்முரமாக இருந்த முருகன் நூலகத்தை பற்றி பேச ஆரம்பித்ததும், முகமலர்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.
"நான் இதே ஊரில்தான் பிறந்தேன். வறுமையின் காரணமாக என்னால் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை . எனினும்  புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விடவில்லை. என் மாத வருமானத்தில் புத்தகம் வாங்குவதற்கு என்று வறுமையிலும்  ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி விடுவேன்.என்வீட்டில் 350 க்கும்  மேற்பட்ட புத்தகத்தினை சேகரித்து வைத்து இருந்தேன்.  2008ல் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத்தண்டனையை  மதுரை மத்திய சிறைச்சாலையில் அனுபவித்தேன்.  அங்கிருந்த சிறை அறைகளுக்கு  நேரு அறை, பாரதி அறை என சுதந்திர போராட்ட தியாகிகள் சிறைத்தண்டனையை அனுபவத்தின் நினைவாக அவர்களின் பெயர்களை அந்த அறைகளுக்கு  சூட்டி  இருந்தனர்.
எத்தனையோ தியாகிகள், தியாகத்திற்காக வாழ்ந்த இடத்தில் நான் என் பிற்போக்கு சிந்தனையால் வாழ்கிறேன் என்ற  எண்ணம்   தோன்றியது.  அந்த எண்ணம் என்னை சமூக சேவைக்கு இழுத்துச் சென்றது.

சிறைத் தண்டனை முடிந்து வந்ததும், என் ஊருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். எங்கள் ஊரில்  நூலகம் இல்லாதது எல்லோருக்கும் ஒரு பெரிய குறையாக  இருந்தது. எனவே நான் என்னிடம் இருந்த புத்தகத்தை கொண்டு நூலகம் அமைக்க முடிவு செய்தேன்  எங்கள் ஊருக்குச் சொந்தமான பாழடைந்த கட்டிடத்தை ஊர்த்தலைவர்களின் அனுமதி பெற்று பழுது பார்த்து , மேலும் 700  புத்தகத்தினை மற்றவர்களிடம் இருந்து தொகுத்து 2011ல் பாரதியார் நூலகம் என்ற பெயரில் ஒரு நூலகத்தினை, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களை கொண்டு திறப்புவிழா கண்டேன்.

மேலும் அந்த நூலகத்தை அரசு நூலகத்துடன் இணைக்க விருதுநகர் மாவட்ட  நூலக அலுவலர் திரு. ஜெகதீசன்  அவர்களை  சந்தித்து கோரிக்கையை வைத்தபோது , அவர் ஒரு ஊரில் நூலகம் திறப்பதற்கு  அரசாங்கம் விதித்துள்ள ஐந்து  நிபந்தனைகளை என்னிடம் எடுத்துரைத்தார்.
அதாவது குறைந்தபட்சம் 200 உறுப்பினர்கள் இருக்க வேண்டும், 2 நூலகப்புரவலர்கள்,  நூலகத்திற்கு  சொந்தமான கட்டடம் கட்ட 5 சென்ட் நிலம் உள்ளிட்ட அரசின் நிபந்தனைகளை தெளிவாகக்கூறினார்.  எனவே,  எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் நானே அணுகி  200 உறுப்பினர்களையும் சேர்த்து ,   2 புரவலர்களையும் சேர்த்து அதற்கான தொகையை அரசாங்கத்தின் பெயரில் வங்கியில் செலுத்தினேன். 5 சென்ட்  இடத்தையும் ஊரார் ஒத்துழைப்புடன்  பெற்றுத்தந்தேன்.

அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்  29-11-2014 அன்று அனைத்து ஆவணங்களையும் அரசாங்கத்திடம்  ஒப்படைத்ததன் விளைவாக,  அன்று நான் துவங்கிய பாரதி நூலகம் இன்று  எங்கள் ஊரில் அரசாங்க நூலகமாக செயல்படுகிறது. அன்று என்னைப் பார்த்து வேண்டாத வேலை பார்க்கிறான் என்றவர்கள் கூட இன்று என்னைப் பாராட்டுகின்றனர்" என்றார் முக மலர்ச்சியுடன்.
நாமும் பாராட்டுவோம்!

சு.சூரியாகோமதி,

No comments:

Post a Comment