போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Sunday, February 7, 2016

விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து தப்புவது எப்படி? (வீடியோ)

கனடாவில் இயங்கும் முக்கிய விமான நிறுவனங்கள் ஆபத்தான தருணங்களில் விமானத்திலிருந்து தப்புவது எப்படி என்ற வழிமுறைகளை பயணிகளுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனடாவில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான மார்க்கெட்பிளேஸ் (Marketplace) என்ற
தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,  ’பல்வேறு துறைகளில் நிகழும் குளறுபடிகள் மற்றும் தவறுகளை’ விசாரணை செய்து, அதனை நிகழ்ச்சியாக ஒளிப்பரப்புகின்றனர். அண்மையில், கனடா விமான நிறுவனங்கள் தங்களுடைய பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை வழங்குகிறதா என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கனடாவின் ஏர் கனடா, வெஸ்ட்ஜெட் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் தங்களுடைய பயணிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை வழங்குவதில்லை என தெரியவந்துள்ளது.

ஒரு விமானம் விபத்தை எதிர்கொள்ளும்போது,  அதில் பயணிக்கும் பயணிகள் குறிப்பிட்ட ஒரு வழிமுறையை பின்பற்றினால், சுமார் 80 சதவிகித காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்கேரி பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஜன் டேவிஸ் (Dr. Jan Davies) கூறுகையில், "பெரும்பாலான விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக பயணிகளுக்கு ‘சீட் பெல்ட்டை’ எவ்வாறு அணிய வேண்டும்? ஆபத்தான நேரத்தில் மருத்துவ பொருட்களை எவ்வாறு பெற வேண்டும்? என்பது குறித்து மட்டுமே ஆலோசனைகள் வழங்குகின்றனர். ஆனால், ’விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணிக்கும் பயணிகள் எவ்வாறு இருக்கையில் அமர்ந்து இருக்க வேண்டும்’ என்ற வழிமுறையை அவர்கள் முன்னதாகவே கூறுவது கிடையாது. இந்த வழிமுறையை ‘தங்களை தாங்களே கட்டிப்பிடித்துக்கொள்ளுதல்’(Brace Position) என்று கூறுவார்கள்.

அதாவது, விமானம் விபத்தில் சிக்கியவுடன், அந்த அதிர்வில் பயணிகளின் உடல்கள் தூக்கி எறியப்பட  அல்லது எதிரில் உள்ள இருக்கையில் மோதிக்கொள்ள மிக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்த்துக்கொள்ள இருக்கையில் அமர்ந்தவாறு எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சில முக்கிய வழிமுறைகள் உள்ளன. முதலில், இருக்கையில் அமர்ந்தவாறு முன்னால் உள்ள இருக்கையில் கைகளை பலமாக ஊன்றிக்கொண்டு, அந்த கைகள் மீது நமது முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். அல்லது, இருக்கையில் அமர்ந்தவாறு உடலை முன்னோக்கி சாய்த்து நமது இருக்கால்களையும் நன்கு பற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். மற்றொரு வழிமுறையாக, கூடுதலாக உடலை கீழ்வரை சாய்த்து நமது பாதங்களுக்கு சற்று மேல் உள்ள கணுக்கால் பகுதிகளை இறுகப் பற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.


இறுதியாக, நமக்கு எதிரே உள்ள இருக்கையை இரு கைகள் கொண்டு கட்டி அணைத்தவாறு இருக்கையில் அமர்ந்திருந்தால், விமானம் தரையில் மோதும்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளலாம். மேலும், விமான நிறுவனங்கள் ஆபத்தான நேரங்களில் இந்த வழிமுறைகளை போதிப்பதை விட்டுவிட்டு விமானம் புறப்படுவதற்கு முன்னதாக மேற்கூறிய இந்த வழிமுறைகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment